அடிக்கல் நடும் நிகழ்வு


வி.சுகிர்தகுமார்  

  'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்'  எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்று(06) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் கு.ததீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க, மேலதிக மாவட்ட முகாமையாளர் ஏ.எம்.இப்றாகிம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த வீட்டிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மானியமாக ஆறு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்;ளதுடன் பயனாளிகளின் பங்களிப்போடு 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக கோளாவில் பிரதேசத்தில் நிர்மாணி;க்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்ட நிலையில் சின்னப்பனங்காடு கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லும் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக கோளாவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு சம்பிரதாய பூர்வமாக உதவிப்பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களால் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் திறவுகோலும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னராக சின்னப்பனங்காட்டில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினையும் அதிகாரிகள் ஒன்றினைந்து நாட்டி வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க  பயனாளிகள் தெரிவு தொடர்பில் தான் திருப்தி அடைவதுடன் சிறந்த முறையில் பணியை முன்னெடுக்கும் பிரதேச செயலகம் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் கு.ததீஸ்வரனையும் பாராட்டினார்.