மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும்!


(க.கிஷாந்தன்)

 

இலங்கை அணி வீரர்களிடம் மஹிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோர வேண்டும் -என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தினார்.

 

நுவரெலியா பகுதியில் 04.07.2020 அன்று இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

மலையக பெருந்தோட்ட மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதற்கே விரும்புகின்றனர். இந்நிலையில் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான எனக்கு எதிராக திகாம்பரம் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார். ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நான் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்மானத்துக்கு வருகின்றன. இது விடயத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு பொறுப்பு கிடையாது.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு 750 ரூபா வழங்கப்படுகின்றது. இதனை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

 

பிரதமர் பதவி தொடர்பில் சஜித் கனவு காணலாம். ஆனால், ஆகஸ்ட் 5 ஆம் திகதி மக்களே முடிவெடுப்பார்கள். ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பிரிதொரு சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.

 

அதேவேளை, 2011 இல் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் சாட்சி எதுவுமின்றியே மஹிந்தானந்த அளுத்கமகே முறைப்பாடு முன்வைத்துள்ளார். எனவே, இதற்கான முழு பொறுப்பையும் அவரே ஏற்கவேண்டும். கிரிக்கெட் வீரர்களிடமும் மன்னிப்புகோர வேண்டும்.

 

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி இரு ஆசனங்களைக் கைப்பற்றும். முயற்சித்தால் மூன்று ஆசனங்களை வெல்லக்கூடியதாக இருக்கும்." - என்றார்.