கொட்டகலை கொரோனா தொற்றாளர்கள், சிகிச்சை முகாமுக்கு



 (க.கிஷாந்தன்)

 

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நான்கு பேரையும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

பத்தனை கிறேக்கிலி தோட்டம், கொட்டகலை வூட்டன் தோட்டம், தலவாக்கலை கிரேட்வெஸ்டன் லூசா ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளன.

 

இவர்கள் இன்று மாலை நான்கு மணியளவில் சிகிச்சை முகாம்களுக்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன்படி பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே இவர்கள் ஊருக்கு வந்துள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

 

அத்துடன், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து வந்துள்ளார்.

 

அதேபோல கொழும்பு, கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து இந்த தோட்டப்பகுதிகளுக்கு கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

 

இதேவேளை, பொகவந்தலாவ கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (28.11.2020) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

 

4 பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குறித்த பெண்ணின் மகளும், பேரப்பிள்ளையும் கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.

 

இதனையடுத்து கொழும்பில் இருந்து வந்த இருவரும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நால்வருமாக மொத்தம் 6 பேரை சுய தனிமைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

இந்நிலையிலேயே அவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கான கிளங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.