.இரானிய ஆதரவு போராளிகள் மீது தொடங்கியது வான் தாக்குதல்

 


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிக்கு வந்த பிறகு முதலாவதாக ஒரு ராணுவ நடவடிக்கையை வெளிநாட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் நடவடிக்கை சிரியா எல்லையில் உள்ள இரானிய ஆதரவு போராளிகள் குழுக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சிரியாவின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினரின் தளங்களை இலக்கு வைத்து இரானிய ஆதரவு போராளிகள் குழு ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு சிவில் கான்ட்ராக்டர் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஒரு அமெரிக்க படை வீரர் மற்றும் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக, பாக்தாதில் ஆயுதமற்ற மண்டலமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்ட தளத்திலும் ராக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு தான் அமெரிக்க தூதரகம் மற்றும் வேறு சில நாடுகளின் தூதரகங்கள் இருந்தன.

அதற்கு பதிலடி தரும் விதமாகவே இரானிய போராளிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக போராளிகள் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சிரியாவில் நடக்கும் மோதல்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு, குறைந்தபட்சம் 22 பேராவது உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய அமெரிக்க தாக்குதல், கிழக்கு சிரியாவை இணைக்கும் இராக்கிய எல்லை அருகே நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் கூறுகிறது. முறையான ராஜீய ஒத்துழைப்பு மற்றும் கலந்தாலோசனைகளுடன் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டன் தெரிவித்துள்ளது.

இராக்கில், இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவை எதிர்கொள்வதற்காக அங்குள்ள இராக்கிய படைகளுக்கு துணையாக சுமார் 25 ஆயிரம் அமெரிக்க படையினர் உள்ளனர்.

இர்பில் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் அடைந்த கட்டடங்கள்.

இர்பில் நகரில் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 11 நாட்கள் கழித்து சிரியா, இராக் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இதுதான் அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் உத்தரவிட்ட முதலாவது ராணுவ நடவடிக்கை.

இந்த ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உளவுத்தகவல்களை பகிர்ந்த இராக்கிய அரசுக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.

ஒருபுறம் முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் முறித்துக் கொள்ளப்பட்ட இரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்போம் என தேர்தல் பரப்புரையின்போது அறிவித்த ஜோ பைடன், அவரது நிர்வாகத்தில் அமைதி வழி தீர்வுக்கு முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    ஆனால் மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார் என காட்டப்படும் சமிக்ஞையை வைத்து, அமெரிக்க படையினருக்கு எதிராக தமது ஆதரவு சக்திகள் மூலம் இரான் சதி செய்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்ற செய்தியை இரானுக்கு ஜோ பைடன் உணர்த்தியிருப்பதாகவே சமீபத்திய தாக்குதல் உள்ளதாகக் கூறுகிறார் பிபிசியின் பால் ஆதம்ஸ்.

    வெள்ளிக்கிழமை தாக்குதல் யாரை இலக்கு வைத்தது?

    சிரியா எல்லை கட்டுப்பாட்டுச் சாவடியில் உள்ள இரானிய ஆதரவு கதைப் யெஸ்போலா, கதைப் சய்யீத் அல் ஷுஹாதா ஆகிய குழுக்களை இலக்கு வைத்தே அமெரிக்க படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த குழுக்கள் சிரியாவில் ஆளும் அரசுக்கு சாதகமாக செயல்படுபவை ஆக கருதப்படுகின்றன.

    ஆனால், அமெரிக்கா குற்றம்சாட்டுவது போல அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபடவில்லை என்று கதைப் சயீத் அல் ஷுஹாதா குழு தெரிவித்துள்ளது.