நகரங்களில் நுழைந்த வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டன


 (க.கிஷாந்தன்)

இன்று (25) காலை 4 மணியுடன் அமுலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதால் மலைய பகுதிகளில் வாழும் மக்கள் நகரங்களுக்கு வருகைத்தந்து பொருட் கொள்வனவில் ஈடுப்பட்டனர்.


அட்டன், தலவாக்கலை, நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் மக்கள் இன்று காலை முதல் பொருட் கொள்வனவில் ஈடுப்பட்டு வருவதை காணகூடியதாக இருந்தது.

மலையக பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வந்தனர்.

நகரங்களுக்கு வரும் மக்களும், வாகனங்களும் பொலிஸாரால் கடுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன் அநாவசியமாக அட்டன் மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களுக்குள் நுழைந்த வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டன.

இதேவேளை, அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்ட பயணத்தடை இன்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் சென்று, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறைந்தபட்ச ஆளணியைக் கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் எனவும்  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் தங்களின் கிராமத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது என இராணுவத் தளபதி மேலும் அறிவித்துள்ளளார்.