அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1109


 


வி.சுகிர்தகுமார் 0777113659   


 பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்திலும்; அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களிலும் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட் கொள்வனவில்  ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

பொது போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத நிலையில் பஸ் தரிப்பிடமும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேநேரம் அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றதுடன் சில வங்கிகளில் தானியங்கி சேவை மூலமாக பணம் பெற அதிகளவான மக்கள் காத்திருந்ததையும் சதொச உள்ளிட்ட நிலையங்களிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளுடன் பொருட் கொள்வனவில் ஈடுபட்டதையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆறுபேர் கொரோனா தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் இதன் காரணமாக சுகாதாரத்துறையினரால் அன்ரிஜன் பரிசோதனைகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்ட முடிகின்றது.

ஆயினும் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1109 ஆக உயர்வடைந்துள்ளதுடன்; கல்முனை பிராந்தியத்தில் 139 ஆக தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அக்கரைப்பற்று பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதையும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை  மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் கொரோனா 3 அலையின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் 6200 பிசிஆர் பரிசோதனைகளும் 3538 ரபிட் அன்ரிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் மேற்பார்வையில் 2675 பிசிஆர் பரிசோதனைகளும் 1595 ரபிட் அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.