#சீன ராக்கெட் பாகம்: இந்தியப் பெருங்கடலில் விழுந்த சிதறல்கள்


 


புவியை அச்சுறுத்திவந்த சீன ராக்கெட்டின் உடைந்த பாகம், புவியை நோக்கி வந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே சிதறிவிட்டதாக சீனா கூறுகிறது.

புவியின் வளி மண்டலத்தில் நுழைந்தபோது ராக்கெட்டின் பெரும்பகுதி சிதைந்துவிட்டதாகவும், ஆனால், சில பாகங்கள் 72.47° கிழக்காகவும் 2.65° வடக்காகவும் விழுந்தது என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இடம் மாலத்தீவுக்கு மேற்கே உள்ளது.

லாங் மார்ச்-5b ராக்கெட் பாகம் அதிவேகமாக புவியை நோக்கி திரும்பி வருவதை அமெரிக்க, ஐரோப்பிய தளங்கள் கண்காணித்து வந்தன. கிரீன்விச் சராசரி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 2.24 மணிக்கு ராக்கெட்டின் பாகங்கள் புவியின் வளி மண்டலத்தில் நுழைந்ததாக சீன அரசு ஊடகம் குறிப்பிடுகிறது. இது இந்திய நேரப்படி 7.54 மணி.

லாங் மார்ச்-5b அரேபிய தீபகற்பத்துக்கு மேலே வளி மண்டலத்துக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்த முடிவதாகவும் நிலத்திலோ, நீரிலோ இதனால் தாக்கம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி கட்டளைத் தளம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த ராக்கெட் பாகங்கள் மக்கள் வாழும் இடங்களில் விழுந்தால் என்ன ஆவது என்ற அச்சம் இருந்துவந்தது. சுற்றுவட்டப் பாதையில் இருந்து ராக்கெட் விழும் அளவுக்கு சீனா கவனக்குறைவாக இருந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியிருந்தார்.

ஆனால், விண்வெளி குப்பை ஒன்றினால், புவியில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்று வல்லுநர்கள் கூறிவந்தனர். புவியின் பெரும்பகுதி கடலாக இருப்பதாலும், இருக்கும் நிலப்பரப்பிலும் பெரும்பகுதி மக்கள் வாழாத பகுதி என்பதாலும் இந்த கணிப்புக்கு அவர்கள் வந்தனர்.

சீனா உருவாக்கிவரும் விண்வெளி நிலையத்தின் முதல் அலகினை லாங் மார்ச்-5b ராக்கெட்டைப் பயன்படுத்தி கடந்த மாதம் செலுத்தியது சீனா. புவியை நோக்கி விழுந்த ராக்கெட் பாகத்தின் எடை 18 டன். பல பத்தாண்டுகளில் புவியை நோக்கி விழுந்த செலுத்தப்படாத வெகு சில பொருள்களில் ஒன்று இது.

இந்த பாகத்தின் வீழ்ச்சியை கவனித்துவருவதாகவும், ஆனால் அதை சுட்டுத் தள்ளும் திட்டம் ஏதுமில்லை என்றும் கடந்த வாரம் அமெரிக்கா கூறியது.

ராக்கெட் பாகம் விழுந்ததாக கூறப்படும் இடம்:

Map: Image shows the approximate landing point of the rocket
1px transparent line

சனிக்கிழமை இரவோ, ஞாயிறு அதிகாலையோ இந்த ராக்கெட் பாகம் வளி மண்டலத்தில் நுழையலாம் என்று விண் குப்பை தொடர்பான வல்லுநர்கள் கணித்திருந்தனர். வளி மண்டலத்தில் நுழையும்போது இந்த ராக்கெட் பாகத்தின் பெரும்பகுதி எரிந்துவிடும் என்றும் அவர்கள் கணித்தனர்.

ஆனால், அதி உயர் வெப்பநிலை மட்டுமே உருகும் உலோகங்கள், வெப்பத்தை தாங்கி நிற்கும் பொருள்கள் வளிமண்டல அழுத்தத்தை தாங்கி நிற்கலாம் என்ற சந்தேகமும் இருந்தது.

இதைப்போல ஒரு ராக்கெட் பாகம் ஓராண்டுக்கு முன்பு புவியில் விழுந்தபோது, அதன் குழாய் அமைப்பு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டில் கண்டறியப்பட்டது.

இந்த ராக்கெட் பாகம் விழுவதால் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்து தொடர்பாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மிகைப்படுத்தப்பட்டவை என்று விமர்சித்த சீன ஊடகம், ஏதோ ஒரு பெருங்கடற்பரப்பில் இந்த சிதைவுகள் விழும் என்று கூறியது.

லாங் மார்ச்-5b
படக்குறிப்பு,

லாங் மார்ச்-5b ராக்கெட்.