ஆலையடிவேம்பு,பிரதேச செயலக அன்ரிஜன் பரிசோதனையில் எவரும் தொள்ளாளர்களாக அடையாளப்படுத்தப்படவில்லை


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 28 பேர் உள்ளிட்ட 40 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் எவரும் தொள்ளாளர்களாக அடையாளப்படுத்தப்படவில்லை  என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

 கொரோனா தொற்று காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒருவர் மரணமடைந்தும் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுக்குள்ளான நிலையிலும் இன்று பிரதேச செயலக செயலாளர் உள்ளிட்ட 28 உத்தியோகத்தர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனையை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டதுடன் இதன்போது எவரும் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படாத நிலையில் பிரதேச செயலகத்திலும் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள்  பாதுகாப்பு தொடர்பில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் எதிர்காலத்தில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆலையடிவேம்பில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 02ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3ஆவது அலையின் பின்னரான முதலாவது மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.

இதனை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் உறுதிப்படுத்திய நிலையில் மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்று 08ஆம் பிரிவைச்சேர்;ந்த 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவசர அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கொழும்பு ஜடிஎச் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.