சட்டம் போடும் இடத்திலும் திட்டம் தீட்டும் இடத்திலும் பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. வளர்ந்த நாடுகளில் எல்லாம் பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு, பெண்களுக்கான சம உரிமை அனைத்தும் சிறப்பாக உள்ள நாடுகளில் முன்னேற்றமும் அதிக அளவில் இருப்பதைக் காண முடிகின்றது! ஆனாலும் நம்மை போன்று வளர்ந்துவரும் நாடுகளில் இவ்வாறு சமவுரிமை பேணப்படுகின்றதா என்பதே இன்றைய கேள்வியாகவும் உள்ளது.
எவ்வளவுதான் பெண்கள் தொடர்பில் எம்மவர்கள்; விழித்தும் உயர்த்தியும் பேசினாலும் அவர்களை தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்றே ஆண்வர்க்கம் இன்றும் விரும்புகின்றது. இந்நிலை இயல்பாகவே இருக்கின்றது. வீடுகளில் ஆரம்பிக்கும் இந்நிலை அரச அலுவலகம் தொடக்கம் அரசியல்வரை தொடர்கின்றது. இந்நிலை எப்போது மாறும்?
இது இவ்வாறிருக்க பெண்களுக்கு அரசியல் அறிவு குறைவு என்பது பொதுவான கருத்து. இந்தக் கருத்திற்கு பின்னால் நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. அந்த வரலாறுதான், பெண்களை தொடர்ந்தும் பின்னிலைக்கு இழுத்துச் செல்கின்றது. இவற்றையெல்லாம் புறந்தள்ளி வெற்றி கொள்ளும் பெண்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வாறு அரசியலிலும் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெற்று வீறுநடைபோடும் அம்பாரை மாவட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் நந்தினி விமலாதித்தனுடனான நேர்காணலினையே உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

அரசியலிலும்; பெண்கள் சாதிக்க முடியும். இதனை நிரூபிக்கும் வகையில் பொதுப்பணியில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து  பலவற்றை சாதிக்க நினைக்கும் உங்களை பற்றிய அறிமுகமொன்றை வழங்க முடியுமா?
கிழக்கு மாகாணத்தின் வளமிக்க மாவட்டமான அம்பாரை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை எனும் அழகிய கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட என்னை எல்லோரும் நந்தினி என அன்போடு அழைப்பார்கள். நடராசா ஞானம்மா ஆகிய எனது தாய் தந்தைக்கு நான் கடைக்குட்டி.  எனது குடும்பத்தில் எனக்கு முன்பாக பிறந்த சகோதரிகள் மூவர் உள்ளனர். ஆகமொத்தத்தில் பெண்களோடு பிறந்த எனக்கு ஆண் சகோதரர்கள் இல்லை. ஆனாலும் ஆண்களுக்கு சரிநிகராகவே பெற்றோரால் நாங்கள் வளர்க்கப்பட்டோம். எனது இளமைகால நினைவுகள் மறக்க முடியாதது.  கல்முனை உவெஸ்லி பாடசாலையில் ஆரம்பமான இளமைக்கால கல்வி; மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் வரை கொண்டு சென்றது. இக்காலத்தில் இளைஞர் கழகங்களில் இணைந்து பல்வேறு சமூக சேவை வேலைத்திட்டங்களில் முன்னிற்று செயற்பட்டேன். எனது கஸ்டகாலமோ தெரியவில்லை மேலதிக கல்வியை தொடர முடியாத நிலையில் இடைநடுவில் கைவிட்டேன். இந்நிலையில் விமலாதித்தன் ஆகிய எனது கணவரை திருமணம் முடித்த நான் தற்போது நான்கு பிள்ளைகளின் தாயாக இருக்கின்றேன். 36 வயதை அடைந்துள்ள நான் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சமூக சேவையில் இணைந்து பணியாற்றி வருகின்றேன். இதன் பரிசாக  2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு மக்களின் பேராதரவோடு மாநகர சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.

தாங்கள் அரசியல் பயணம் எப்படி ஆரம்பமானது ?
நான் ஏற்கனவே சொன்னது போல வேள்வி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களில் இணைந்து பணியாற்றினேன். வேள்வி அமைப்பு எனக்கு ஊக்கத்தை தந்தது. இருந்த போதிலும் மக்களது தேவையினை முழுதாக பூர்த்தி செய்ய முடியாமல் போனது. அரசியலில் உள்நுழைவதன் மூலமே மக்களின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் எனவும் என் உள்மனது அடிக்கடி சொன்னது. இதன் காரணமாக யதார்த்தத்தை உணர்ந்தவளாக நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலுக்குள் வர நினைத்தேன். இதன் ஆரம்பமாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபையின் 9ஆம் வட்டாரத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வாறு நான் தெரிவு செய்யப்படுவதற்கு பெண்களுக்கு வழங்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீடே பிரதான காரணம்.  மேலும் எனது கணவரும் ஒரு காரணம். நான் போட்டியிட்ட கட்சியின் நீண்ட நாள் தொண்டர் எனது கணவர் என்பதோடு எனது சமூக சேவை மற்றும் அரசியல் ஈடுபாடு இதற்கு பக்கபலமாக அமைந்தது.

குடும்பத்தையும் அரசியலையும் எவ்வாறு ஒரே சமயத்தில் மேற்கொள்கின்றீர்கள்?
 நான் அரசியலில் இணைவதற்கும் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கும் அடிப்படை காரணம் எனது குடும்பத்தின் பூரண ஒத்துழைப்பு. அதிலும் குறிப்பாக எனது கணவரின் பங்களிப்பும் ஒத்துழைப்புமே காரணம். அரசியல் மாத்திரமன்றி குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் கணவருடன் இணைந்து  நடைமுறைப்படுத்துகின்றேன். இதன் காரணமாக எனது குடும்ப வாழ்க்கையினையும் அரசியல் பயணத்தினையும் சமாந்தரமாக இரு கோடுகள் போன்று ஒரே சமயத்தில் தடைகளின்றி முன்கொண்டு செல்கின்றேன்.
அரசியலுக்கு வருவதற்கு தடையாக இருந்தவை எவை என கருதுகின்றீர்கள்?
இதில் முக்கியமான காரணி நான் ஒரு பெண் என்பதே. இதன் காரணமாக நான் பல வழிகளில் ஒதுக்கப்பட்டேன். இதுவே பல தடைகளை தந்தது. அத்தோடு சில கட்சிகளின் தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட அவதூறுகள். எதிர்ப்புக்கள் வதந்திகள் என பலவற்றை சொல்லலாம். இதைவிட பலரது அச்சுறுத்தல்கள் சவாலாக அமைந்தது. அத்தோடு கட்சிகளின் தலையீடுகள் என பல காரணங்கள் தடையாக அமைந்தது.
இந்த தடைகளை உடைக்க முடிந்ததா?  
நிட்சயமாக! அனைத்து தடைகளையும் உடைத்தே இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றினேன். அதுவே எனக்கு வெற்றியை தந்தது. எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து பெண்களாலும் பலவற்றை சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளேன்.
தங்களது கணவரின் ஒத்துழைப்பு மற்றும் பிள்ளைகளின் பங்களிப்பு எவ்வாறு உங்கள் அரசியலுக்கு உதவுகின்றது.
ஒருவரியில் சொல்லப்போனால் அளப்பரியது என்றே சொல்வேன். எனது வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் முன் நிற்கின்றவர் எனது கணவர். அதுவே எனது பலம். மேலும் எனது பிள்ளைகள் மற்றும் உறவுகள் கிராம மக்கள் ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை சொல்லலாம். குறிப்பாக தேர்தல் காலத்தில் எனக்கு முன்பாக வைக்கப்பட்ட விமர்சனங்கள் எதிர்ப்புக்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியவர்களே இவர்கள். அவர்களது பக்கபலமான செயற்பாடுகள் எனது வெற்றிக்கு வழிவகுத்தது.  
உங்;கள் கிராமத்தவர் உங்கள் கருத்தை மதிக்கின்றார்களா? அவர்களை  பொறுத்த மட்டில் உங்களை எவ்வாறு நோக்குகின்றனர்.
பெண் எனும் அடிப்படையிலும் நான் போட்டியிட்ட கட்சி எனும் அடிப்படையிலும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்களே அலை அலையாக அதிகமாக எழுந்தது. அவ்வாறு எதிர்ப்புக்கள் உருவானபோதிலும் மக்களின் நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மனதில் கொண்டு மக்களது தேவையே எனது சேவை என எண்ணம் கொண்டு களத்தில் குதித்தேன். போனஸ் ஆசனத்தின் மூலம் தெரிவு செய்யவும் பட்டேன். இதன் பின்னர் கிராமத்திற்கு தேவையான வீதி அபிவிருத்தி தெருவிளக்கு பொருத்துதல் விளையாட்டுக்கழகங்களுக்கான உதவிகள் வாழ்வாதார உதவிகள் குறைவீடு நிவர்த்தி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவற்றை செய்து காட்டினேன். இதன் பின்னராகவே மக்கள் உணர்ந்து கொண்டதுடன் அவர்களது ஆதரவினை மேலும் வழங்கி வருகின்றனர்.
அரசியலுக்கு வரும் முன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? இப்போது எப்படி உள்ளது?
அரசியலுக்கு வரும்முன் எனது கணவர் எனது பிள்ளைகள் எனது குடும்பம் எனும் அடிப்படையில் குடும்பத்தின் தேவையினை மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டியவளாக இருந்தேன். அத்தோடு முடிந்த சமூக சேவையினையும் செய்து வந்தேன். ஆனால் தற்போது அந்நிலை முற்றாக மாறுபட்டுள்ளது.
எனது கிராம மக்களின் தேவை என்ன? எனது தொகுதி மக்களின் அபிலாசைகள் என்ன? என்பவற்றை அறிந்து செயற்படவேண்டியவளாக உள்ளேன். ஆகவே பொறுப்பு மிக்கவராக உணர்கின்றேன். இதன் காரணமாக முடிந்தவரை பெற்றுக்கொண்டுள்ள அனுபவத்தினை பயன்படுத்தி மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்து வருகின்றேன்.

உங்களால் சாதிக்க முடிந்தவை மற்றும் சாதிக்க நினைப்பவை தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளேன். ஏனைய பெண்களையும் அரசியலுக்குள் அழைத்துவருவதற்கு காரணமாக அமைந்துள்ளேன். இதுவும் நான் சாதித்தவையாக நினைக்கின்றேன்.
தொடர்ந்தும் பல சேவைகளை மக்களுக்கு வழங்கி சாதனை படைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். இதன் காரணமாக தொடர்ந்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு பெண்களாலும் அனைத்து விடயங்களிலும் ஒளிர முடியும் என்பதுடன் என்போன்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க ஆசைப்படுகின்றேன்.

உங்களை போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பெண்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்பதை சொல்ல விரும்புகின்றேன். எவ்விதத்திலும் பெண்களை குறைத்து மதிப்பிடுவது தவறானது எனவும் கூறவிரும்புகின்றேன். சட்டம் போடும் இடத்திலும் திட்டம் தீட்டும் இடத்திலும் பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அவ்வாறு சட்டமும் திட்டமும் தீட்டும் இடமாக அரசியல் இருப்பதால் பெண்கள் கண்;டிப்பாக அரசியலுக்குவரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன். அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்கள் கிடையாது என்பதுடன் அனைத்தையும் தாண்டி பெண்கள் பலவற்றில் சாதிக்கவும் பெண்களிடம் அறைகூவல் விடுக்கின்றேன். இந்நிலையில் அரசியலுக்குள் வர நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கின்றேன்.