பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிமின் சேவைநலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து   விடைபெறவுள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிமின் சேவைநலன் பாராட்டி  கௌரவிக்கும் நிகழ்வு  இன்று (25) ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் எம்.சி.எம். நவாஸ் வழங்கிய வரவேற்புரையுடன் ஆரம்பமான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தொடர்பிலான சிறப்பு அலசலை கலை,கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்த்தினார். தொடர்ந்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக வெற்றிகள், சாதனைகள் தொடர்பிலான உரையை பேரவை உறுப்பினர்  பேராசிரியர் கேலின் என் பீரிஸ் நிகழ்த்தினார். ஆன்லைன் கற்றல் மற்றும் கற்பித்தல் மற்றும் அதற்கான சாத்திப்பாடுகள் தொடர்பிலான பிரதம உரையை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் சலித்த பெனாரகம நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களின் சேவை நலனை பாராட்டி கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா மற்றும் முன்னாள் வவுனியா அரசாங்க அதிபரும் பேரவை உறுப்பினருமான ஐ.எம். ஹனிபா ஆகியோர் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், உணர்வு ததும்ப தன்னுடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் நன்றி கூறியதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் தான் பெற்றுக்கொண்ட சுவையான அனுபவங்களையும் சபையோருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த சேவைநலன் பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதியினால் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பீடாதிபதிகள், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி பதிவாளர்கள், நூலகர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.