வாச்சிக்குடாவினை வாட்டி வதைத்தன, யானைகள்


 

வி.சுகிர்தகுமார் 0777113659   ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாச்சிக்குடா பிரிவின் வயல் பிரதேசத்தை அன்மித்துள்ள தோட்டப்பகுதியில் நேற்றிரவு(23) உட்புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை உள்ளிட்ட பயன்தரு மரங்களையும் தோட்டப்பயிர்ச்செய்கையினையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
குறித்த பிரதேசத்தின் அருகிலே இருக்கும் களப்பினுள் தங்கி நிற்கும் யானைகளே இரவு வேளையில் கிராமத்தை அன்மித்த பிரதேசத்திற்குள் உட்புகுந்து பயிர்களை சேதம் செய்துள்ளதுடன் தென்னை மரங்களையும் முறித்துள்ளது.
அத்தோடு அருகில் இருந்த தோட்டப்பயிர்ச்செய்கையினையும் வாழை மரங்களையும் பிடிங்கி எறிந்துள்ளது.
சேதத்தினை விளைவித்த யானைகளை மக்கள் விரட்டிய போதும் மீண்டும் அருகில் உள்ள களப்பினுள் சென்று தங்கி நிற்பதாக மக்கள் கூறுகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை செய்கையின் அறுவடை முடிவடைந்த இச்சந்தர்ப்பத்தில் மனிதர்கள் நடமாட்டமின்மையால் இலகுவாக இரவு வேளையில் கிராமத்தினுள் யானைகள் உட்புகுந்துள்ளதாகவும் தொடர்ந்தும் இவ்வாறு இரவு வேளையில் வருகை தந்து தாக்க முற்படும் எனவும் இதனால் அச்சமடைந்துள்ள அப்பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று சென்ற பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உயர் அதிகாரிகள் நிலைமையினை பார்வையிட்டதுடன் யானை தொல்லையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் அவற்றை விரட்டுவதற்காகவும் முதற்கட்டமாக யானை வெடிகளையும் கிராம உத்தியோகத்தர் மூலமாக வழங்கி வைத்தார்.
மேலும் குறித்த யானை பிரச்சினை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியினையும் முன்னெடுத்துள்ளார்.