நுவரெலியா -கர்ப்பிணி தாய்மார்களின் எதிர்ப்பு பிறகு இரண்டாம் தடுப்பூசி


 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முதலாவது டோஸ் ஏற்றிக்கொள்ள நுவரெலியா பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வரவழைக்கப்பட்ட 400க்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்கள், காலநிலை சீர்க்கேடையும் பொருட்படுத்தாது வருகை தந்திருந்தனர். இருப்பினும், வருகை தந்த தாய்மார்களுக்குநேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என பொதுச் சுகாதார வைத்திய பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோபமடைந்த கர்ப்பிணித் தாய்மார்கள், சுகாதாரக் காரியாலத்துக்கு முன் குவிந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதன்பின், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டு, கையிருப்பில் காணப்படும் தடுப்பூசிகளை வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது.

பின்னர், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பி சென்றோரும் வருகை தந்து தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனர்.

இதன்போது, நானுஓயா, ரதல்ல, கெல்சி, டெஸ்போட், கந்தப்பளை ஆகிய இன்னும் பல தோட்டங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இருந்து கர்ப்பிணித் தாய்மார்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.