"அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" (க.கிஷாந்தன்)

வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் 23.08.2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று வட, கிழக்கு மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது வரவேற்க கூடிய விடயமாகும்.

அதேபோல மலையகத்திலும் இன்று எங்களுடைய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக சம்பள உயர்வு பிரச்சினை, தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிடைக்காத சூழ்நிலை தடுப்பூசி தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமை என பல்வேறு பிரச்சினைகளை எமது மக்கள் சந்தித்து வருகின்றார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கான ஒரு பாரிய அழுத்ததினை கொடுக்க முடியும். மலையக கட்சிகள் தனித்து நின்று செயல்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது.

அணைவருடனும் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான முன்னெடுப்புகளை உரியவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இன்று கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற இந்த சூழ்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் பல மைல்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டு இருப்பதால் எங்களுடைய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே ஏனைய மாவட்டங்களை போல மலையக பகுதிகளில் இருக்கின்ற பாடசாலைகள், ஆலய மண்டபங்கள், சனசமூக நிலையங்கள் இவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக செயற்படுத்த முடியுமாக இருந்தால் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அரசாங்கம் 2000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இந்த சூழ்நிலையில், அந்த தொகையானது மலையகத்திலே கடந்த காலங்களில் கட்சி ரீதியாக வழங்கப்பட்டதை போல் அல்லாமல் உரியவர்களுக்கு சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் சரியானவர்களை இணங்கண்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் தன்னுடைய இயலாமையை மறைத்து கொள்வதற்காக அரசாங்கத்திற்குள் சிக்கல்கள் இருப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி மக்களின் உண்மையான பிரச்சினைகளை மழுங்கடிக்க செய்வதற்கு முயற்சி செய்கின்றது.

எனவே அந்த செயல்பாடை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கை நாட்டிற்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ, அனர்த்தங்கள் ஏற்படுகின்றதோ, அந்த ஒவ்வோரு சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கம் தன்னுடைய உதவி கரத்தை நீட்டி இருக்கின்றது.

இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் எங்களுக்கு தேவையான ஒரு தொகை தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வைத்ததோடு, இன்னும் பல்வேறு உதவிகளை செய்தது.

இன்று ஓட்சிஜன் தடுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் கப்பல் மூவமாக 100 டன் ஓட்சிஜன் அனுப்பி வைத்துள்ளதோடு, எங்களுடைய கப்பல் மூலமாக கொண்டு வருவதற்கு 40 டன் ஓட்சிஜனையும் வழங்கியுள்ளது.

காலத்தின் தேவையறிந்து இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. எனவே இன்னும் பல உதவிகளை இந்திய ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் எங்களுடைய வெளியுறவு கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

அதனை உணர்ந்து புதிய வெளியுறவு அமைச்சர் செயல்படுவார் என எதிர்ப்பார்க்கின்றோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.