மருதமுனை 65 M வீட்டு திட்டத்துக்கான வீடுகளை பகிர்ந்தளிக்க ஐவர் கொண்ட குழு நியமனம்.



(சர்ஜுன் லாபீர்)


மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையிலான ஐவர் கொண்ட  குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார்.

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 65 M வீட்டுத் தொகுதியில் பல வீடுகள் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் ஏற்கனவே திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவே இந்த ஐவர் கொண்ட குழுவை அரசாங் அதிபர் நியமித்துள்ளார்.

இக்குழுவில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் டி.செய்ஸா சிரிவர்த்தன,உதவி அரசாங்க அதிபர் டபிள்யூ சமன்ஸ செனவிரத்தன மற்றும் கல்முனை பிரதேச  செயலாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் மற்றும் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எல். ஜெளபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கல்முனை கிரீன் ஃபீல்ட் வீட்டுத்திட்டத்தில் பகிர்ந்தளிக்கப்படாத வீடுகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமிக்கப்பட்டுள்ள இந்த ஐவர் கொண்ட குழுவின் ஊடாக குறித்த வீடுகளை அவசரமாக பகிர்ந்தளிக்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.