"வேறு எந்த அணிக்காகவும் ஒருபோதும் ஆட மாட்டேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட விசுவாசமாக இருப்பதே முக்கியம்"


 


பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் ஒரு விளையாட்டு வீரராக பெங்களூரு அணிக்கு 120 சதவிகித பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வேறு எந்த அணிக்காகவும் ஒருபோதும் ஆட மாட்டேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட விசுவாசமாக இருப்பதே முக்கியம். ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கடைசி நாள்வரை பெங்களூரு அணியுடனேயே இருப்பேன்" என்றார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி.

கொல்கத்தா அணியுடனான பிளே ஆப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெளியேறிய பிறகு கவலை தோய்ந்த முகத்துடன் அவர் பேசினார்.

பெங்களூரு அணியின் கேப்டனாக அவர் ஆடி முடித்திருக்கும் கடைசி சீசன் இது.

சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த பெங்களூரு அணி முக்கியமான போட்டியில் தோற்றுப் போனது ரசிகர்களை பெருங்கவலையடைச் செய்திருக்கிறது. பெங்களூரு அணியின் ரசிகர்கள், விராட் கோலியின் ரசிகர்களையும் தாண்டி பலரும் சமூக வலைத்தளங்களில் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும் கோலிக்கு விடையளிக்கும் வகையிலான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. "முன் மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பவராாக இருக்கிறீர்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திகைக்க வைத்த விராட் கோலியின் முடிவு

சார்ஜா மைதானத்தில் ரன் குவிப்பது சிரமம் என்பதுடன் இரண்டாவது பேட்டிங் ஆடுவது நல்லது என்ற பொதுவான கருத்து இருந்தபோது, டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.


முதலில் பேட்டிங் செய்த அணி சராசரியாக எடுத்த ரன்கள் 137 தான் என்பதால் விராட் கோலியின் முடிவு பலரையும் திகைக்கச் செய்திருக்கக் கூடும். அப்போது பலரும் கோலியின் முடிவு குறித்துப் விமர்சனம் செய்யத் தொடங்கியிருந்தார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

டாஸ் முடிந்ததும் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன், "டாஸில் தோல்வியடைந்தது ஒன்றும் எங்களுக்குக் கவலையளிக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பந்து வீசுவதையே தேர்வு செய்திருப்போம்" என்றார்.

அதேபோல எமிரேட்சில் இரண்டாவது பந்துவீசிய எந்தப் போட்டியிலும் கொல்கத்தா அணி தோற்கவில்லை என்ற புள்ளி விவரமும் விராட் கோலியின் முடிவு குறித்து பெங்களூரு அணியின் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

ஆனால் டாஸின்போது பேசிய கோலி "சார்ஜாவில் இரண்டாவது பேட் செய்து இலக்கைத் துரத்துவது கடினம் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம்" என்று கூறினார்.

நரைனின் சுழலில் சிக்கிய பெங்களூரு

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது குறித்து விராட் கோலி மீது எழுந்த விமர்சனங்கள் நீர்த்துப் போகும் அளவுக்கு முதல் சில ஓவர்களில் அவரது பேட்டிங் இருந்தது.

பெங்களூரு அணி 170 ரன்கள் வரை எடுப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அப்போது கணிக்கப்பட்டது.

ஆனால் ஆறாவது ஓவர் தொடக்கத்தில் படிக்கல் வெளியேறிய பிறகு, பவர் பிளே ஓவர்கள் முடிந்து ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. பின்னர் 12-ஆவது ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது நரேனின் சுழலில் ஸ்டம்பை இழந்து கோலி வெளியேறினார். சுமார் ஒரு மணி நேரம் களத்தில் இருந்த கோலி 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்தார்.

இந்தப் போட்டியில் முக்கிய வீரர்களான பரத், கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகிய நான்கு பேரும் நரைனின் சுழற்பந்து வீச்சில் வெளியேறினார்கள். இதுவே பெங்களூரு அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது.

16-ஆவது ஓவரில் மூன்று ரன்களும் 17-ஆவது ஓவரில் இரண்டே ரன்களும் மட்டுமே கொடுத்த கொல்கத்தா பந்து வீச்சாளர்கள், பெங்களூரு அணியை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

20 ஓவர் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி.

மட்டையிலும் அதிரவைத்த நரைன்

பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அந்த அணியின் கிறிஸ்டியன் வீசிய 12-ஆவது ஓவர்தான். அதுவே கொல்கத்தா இன்னிங்ஸின் திருப்புமுனைப் புள்ளி.

139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. ஆனால் 12-ஆவது ஓவரில் சுனில் நரைன் மூன்று சிக்சர்களை விளாசி, கொல்கத்தா அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். அந்த ஒரே ஓவரில் 22 ரன்கள் கொல்கத்தா அணிக்குக் கிடைத்தன.

ஆனால் அதன் பிறகு பெங்களூரு அணியைப் போல ரன்களை எடுக்கத் கொல்கத்தா தடுமாறியது. கடைசி மூன்று ஓவர்களில் 15 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, சிராஜ் வீசிய அடுத்த ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. நரைனும் கார்த்திக்கும் வெளியேறினார்கள். வெறும் 3 ரன்களே எடுக்கப்பட்டிருந்தன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 12-ஆவது ஓவரில் 22 ரன்களைக் கொடுத்த கிறிஸ்டியன் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே 4 ரன்களை அடித்தார் ஷாகிப் அல் ஹசன். கடைசி 5 ஓவர்களில் அடிக்கப்பட்ட இரண்டாவது பவுண்டரி அது. வெற்றிக்கு அது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அதன் பிறகு இலக்கை எட்டுவது கொல்கத்தா அணிக்கு எளிதாகிவிட்டது. இரண்டு பந்து மீதமிருந்த நிலையிலேயே 139 ரன்களை எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது.