"மக்களுக்கு விசேட நிவாரணம் அல்லது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்"


 


(க.கிஷாந்தன்)

 

நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பெருந்தோட்ட சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா சம்பளம் கூட முறையாக கிடைப்பதில்லை. எனவே, வரவு - செலவுத் திட்டத்தில் எமது மக்களுக்கு விசேட நிவாரணம் அல்லது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

 

மஸ்கெலியாவில் இன்று (14.10.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

' ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினம் நினைவு கூரப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மலையகத்திலுள்ள வளங்கள் சுரண்டப்படுகின்றன.  தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் அதன்மூலம் விடிவு ஏற்படவில்லை. தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சம்பளத்துக்கு 20 கிலோ கொழுந்து பறித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

மறுபுறத்தில் நாட்டிலே பொருட்களின் விலைகள் வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளன. நாட்டிலுள்ள மக்களுக்கு இதனால் பாதிப்பு என்றபோதிலும் பெருந்தோட்ட சமூகத்துக்கே அதிக தாக்கம் ஏற்படும். வாழ்க்கைச்சுமை அதிகரிக்கும். எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட நிவாரணம் அல்லது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இதற்கான யோசனையை நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்.

 

அதேவேளை, இயற்கை விவசாயத்தையே நாம் ஊக்குவிக்கின்றோம். இரசாயனம் இல்லாத நிலைமை உருவாக வேண்டும். கியூபாவை உதாரணமாக எடுத்து செயற்படவேண்டும். ' -என்றார்.