கிளைபோசேட் அனுமதி: எதிராக மனுத் தாக்கல்



கிளைபோசேட் பூச்சிகொல்லி மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வலிதற்றதாக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பூச்சிகொல்லிகள் பதிவாளர், விவசாயம் அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

கிளைபோசேட் பூச்சி கொல்லிக்கு 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளைபோசேட்டின் பயன்பாடு நீர்நிலைகள், மண், தாவரம், மீன்கள், பறவைகள் உட்பட மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளைபோசேட் மீதான தடையை நீக்குவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று தீர்ப்பளிக்குமாறும் தடையை நீக்குவதற்கான உத்தரவை இரத்துச் செய்யுமாறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.