மலையகத்தை மறந்த 'முஸ்லிம் எம்.பிக்கள்'!





 'அதிஉயர் சபையில்'

மலையகத்தை மறந்த 'முஸ்லிம் எம்.பிக்கள்'! 

விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!! 


(ஆர்.சனத்) 


இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் 4 முஸ்லிம் கட்சிகள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 


1. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

3. தேசிய காங்கிரஸ் 

4. முஸ்லிம் தேசியக் கூட்டணி

 

இவற்றில் முஸ்லிம் தேசியக் கூட்டணி, தேசிய காங்கிரஸ் என்பன அரச பங்காளிக்கட்சிகளாக உள்ளன.  


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் பங்காளிக்கட்சிகளாக உள்ளன. 

 

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மர சின்னத்தில் போட்டியிட்டு சபைக்கு தெரிவான நஷீர் அஹமட் தற்போது அமைச்சராக உள்ளார். 


ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல)  மர சின்னத்தின் போட்டியிட்டு சபைக்கு தெரிவான எஸ். எம். எம். முஸ்ஸாரப், ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிவருகின்றார்.


சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அப்துல் அலீம், கபீர் ஹாசீம்,  இம்ரான் மஹ்ரூப் ஆகிய முஸ்லிம் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். முஜிபூர் ரஹ்மான் பதவி விலகியதையடுத்து அந்த இடத்துக்கு தெரிவான பௌசி தற்போது அரசு பக்கம் உள்ளார். 


முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், பைசால் காசீம், எஸ்.எம். தௌபீக், எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றனர். ஆனால் அவர்கள் மு.கா. உறுப்பினர்கள்.


ரிஷாட் பதியூதின், இஷாக் ரஹுமான் ஆகிய மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டுதான் சபைக்கு தெரிவாகினர்.


முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் கூட்டணியாகவே புத்தளம் மாவட்டத்தில் இருந்து அலி சப்ரி ரஹீம் தராசு சின்னத்தில் சபைக்கு தெரிவானார்.


அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சர் அலி சப்ரி, மர்ஜான் பளீல், மொஹமட் முஸம்மில் ( விமல் அணி) ஆகிய மூன்று எம்.பிக்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம்வர வாய்ப்பளிக்கப்பட்டது. வன்னி மாவட்டத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு காதர் மஸ்தான் வெற்றிபெற்றார்.


நாடாளுமன்றத்தில் மலையக மக்கள் தொடர்பில் நேற்று (11) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதற்கான பிரேரணையைக் கொண்டுவந்தார்.

 

இவ்விவாதத்தில் பங்கேற்று மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமைக்கு முஸ்லிம் எம்.பிக்கள் குரல் கொடுப்பார்கள் என்றே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.  ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அலீம்  மட்டுமே பங்கேற்று உரையாற்றினார்.


மு.காவின் தலைவர் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். பெருந்தோட்ட பகுதி மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர்.  தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் விவாதத்தில் பங்கேற்க முடியாமல்போய் இருந்தால்கூட அவரின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவராவது உரையாற்றியிருக்கலாம் என்பதே மக்களின் ஆதங்கம். 


மக்கள் காங்கிரஸ் சார்பிலும் எவரும் உரையாற்றவில்லை.   இஷாக் ரஹுமான் எம்.பி., வடிவேல் சுரேஷ் எம்.பியின் உரையை வரவேற்று மாத்திரமே இருந்தார்.


மலையக மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக விமர்சிக்கப்பட்டுவந்த அதாவுல்லா, இவ்விவாதத்தில் பங்கேற்று மலையக மக்களுக்காக குரல் எழுப்பி, கடந்த கால கசப்பான சம்பவங்களுக்கு பரிகாரம் தேடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் உரையாற்றவில்லை. 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களும் உரையாற்றவில்லை.


மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கு, மாற்றத்துக்கு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவும் அவசியம். விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட்டால்கூட அது நிறைவேறுவதில் அவர்களின் பங்களிப்பு முக்கியம். இந்த தார்மீக கடமையை - சமூக பொறுப்பை சுட்டிக்காட்டவே இப்பதிவு. 


பலஸ்தீன விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பாலான மலையக எம்.பிக்கள் பங்கேற்காமையும் பெரும் குறைபாடாகும்.  


( பதிவுக்கான நோக்கத்தை சுருக்கமாக குறிப்பிட்டுவிட்டேன். இனவாதத்தை பரப்புவதோ, முஸ்லிம் எம்.பிக்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதோ நோக்கம் அல்ல. மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அவர்களின் பங்களிப்பும் அவசியம். எனவே, ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கவும். இன, மத ரீதியிலான கருத்துகளை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளவும். அதேபோல முஸ்லிம் மக்கள் மலையக மக்களுக்கு குரல் கொடுப்பதில்லை எனவும் கூறவரவில்லை. முக்கியமான தருணத்தில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே கோரிக்கை.)