சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு




 


(வி.ரி.சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகம் சர்வதேச தாய்மொழி தினத்தை (21.02.2024) முன்னிட்டு ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் நேற்று முன்தினம் (2024.02.27)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது .

தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. 

இதனையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.

 "நமது தாய்மொழியை  நினைத்து நாம் பெருமிதம் அடையலாம். ஆனால் இன்னுமொருவருடைய மொழியை சிறுமைப்படுத்துவது மனித அறமாகாது" என்பது தாய்மொழிகள் தினம் சொல்லும் செய்தி.
இதன்போது "நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் த. சஞ்சீவி சிவகுமாரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கணேஷா கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கிய 126வது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது......தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில்  இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள், பிரதேச மூத்த எழுத்தாளர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்