காஸா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தை தடுக்காத அமெரிக்கா மீது இஸ்ரேல் கோபம்





 25 மார்ச் 2024

காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது.


இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.


இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா.


ஆனால் வியாழனன்று, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்மு றையாக முன்வைத்தது அமெரிக்கா. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

புறக்கணித்தது ஏன்? அமெரிக்க தூதர் விளக்கம்

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் காசா தீர்மானத்தை அமெரிக்கா ஏன் புறக்கணித்தது என்பது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் விளக்கம் அளித்துள்ளார்.


ரஷ்யா மற்றும் சீனாவால் தடுக்கப்பட்ட முந்தைய அமெரிக்க தீர்மானத்தை அவர் முதலில் குறிப்பிட்டார், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க அவர்களால் இன்னும் முடியவில்லை". என்று அவர் கூறினார்.


"இராஜதந்திர முயற்சிகள் மூலம் நீடித்த அமைதியை முன்னெடுப்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர்," என்று லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.


இன்றைய தீர்மானத்தில், "முக்கிய திருத்தங்கள்" புறக்கணிக்கப்பட்டதாக தாமஸ்-கிரீன்ஃபீல்ட் தெரிவித்தார். குறிப்பாக ஹமாஸின் கண்டனம் தெரிவிக்கப்படாதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.


"தீர்மானத்தில் உள்ள அனைத்தையும் நாங்கள் ஏற்கவில்லை," என்று அவர் கூறினார். "அந்த காரணத்திற்காக, எங்களால் துரதிருஷ்டவசமாக ஆம் என்று வாக்களிக்க முடியவில்லை."என்றார் அவர்.


அவர் மேலும் கூறுகையில் "இருப்பினும், நான் முன்பு கூறியது போல், இந்த கட்டுப்பாடற்ற தீர்மானத்தில் சில முக்கியமான நோக்கங்களை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையுடன் எந்தவொரு போர் நிறுத்தமும் வர வேண்டும் என்பதை சபையில் பேசுவதும் தெளிவுபடுத்துவதும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக இஸ்ரேல் அதிருப்தி

போர் நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா தவறியிருப்பது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்நாட்டின் "தெளிவான பின்வாங்கல்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.


காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் முயற்சிகளையும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 130க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளையும் இது பாதிக்கும் என்று அவர் கூறினார்.


இஸ்ரேல் vs பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுக்குழு பயணம் ரத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வாரம் வெள்ளை மாளிகைக்கான இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார்.


ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


காசாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலை எதிர்பார்க்கும் முன் வரும் இந்த விஜயத்தை ரத்து செய்வதாக நெதன்யாகு முன்னர் அச்சுறுத்தியிருந்தார். இதை பைடன் நிர்வாகம் எதிர்த்துள்ளது.


இஸ்ரேல் நடவடிக்கையால் அமெரிக்கா ஏமாற்றம்

இந்த வாரம் அமெரிக்காவிற்கான பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்ததற்கு அமெரிக்கா ஏமாற்றம் தெரிவித்துள்ளது.


வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அமெரிக்கா "மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மாதங்களாக நீடிக்கும் போர் ஓயுமா?

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 32,000க்கும் அதிகமான மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காஸாவில் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சமீப காலமாகவே அமெரிக்கா முன்பை விட அதிகமாக இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகிறது.


காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவு இன்றி தவிப்பதாக கூறும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.


மனிதநேய உதவிகளை செய்ய இஸ்ரேல் தடையாக இருப்பதாக ஐநா சபை குற்றம் சுமத்தியிருந்தது. அதே சமயம் உதவிகளை விநியோகிப்பதில் ஐநா சரியாக செயல்படவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது.


காஸாவை ஆட்சி செய்து வரும் பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில், 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக்கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது. அதனால், அக்டோபர் 7 தொடங்கிய போர் தற்போது வரை நடந்து வருகிறது.