அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் சிட்டுக்களின் சிறகசைவு சாதனை பெருவிழா



 



(வி.சுகிர்தகுமார்)


 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களையும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் கௌரவிக்கும் சிட்டுக்களின் சிறகசைவு சாதனை பெருவிழா பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (14) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் மு.தங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.யோகராஜா அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலய அதிபர் ரவிலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களையும் அதிதிகளையும் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இதன் பின்னராக பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிதிகள் உரையாற்றியதுடன் 13 வருடங்களாக பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்து ஓய்வு பெறவுள்ள அதிபர் மு.தங்கேஸ்வரனின் சேவையினை பாராட்டி பேசினர்.
தொடர்ந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களும் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் 13 வருடங்களாக பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்து ஓய்வு பெறவுள்ள அதிபர் மு.தங்கேஸ்வரனின் சேவையினை பாராட்டி பாடசாலை கல்வி சமூகமும் பெற்றோர்கள் கௌரவித்ததுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.