முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் பரிந்துரைகளால், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, குறித்த ஆணைக்குழு அவருக்கு எதிராக வெளியிட்ட பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விசாரணைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வெளியிட்டது.
தீர்ப்பை வெளியிடும் போது, நீதிபதிகள் குறிப்பிட்டதாவது: மனுதாரருக்கு எதிராக அந்த விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க அந்த ஆணைக்குழுவிற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.
அதன்படி, அந்த விசாரணையின் அடிப்படையில் ஆணைக்குழுவால் அவருக்கு எதிராக வெளியிடப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் சட்டத்திற்கு முரணானவை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
அதனால், மனுதாரருக்கு எதிராக அந்த ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் விசாரணைகளும் செல்லாது என நீதிபதிகள் குழாம் ஒருமனதாக தீர்ப்பளித்தது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக, அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேயரத்ன, அதன் உறுப்பினர்களான முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரா ஜயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
தாம் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும், நீதியமைச்சில் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றிய காலத்தில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அரசு சேவைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, அந்தக் ஆணைக்குழு தனக்கு எதிராக பரிந்துரைகளை வெளியிட்டதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த ஆணைக்குழுவால் தனக்கு எதிராக வெளியிடப்பட்ட பரிந்துரைகளின் விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், அதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment