வேட்பாளராக நியமிக்குமாறு, சிரேஸ்ட உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அதனை வழங்கவில்லை





வி.சுகிர்தகுமார்          


சுயேற்சை குழுவை உருவாக்கியது வேறு யாருமல்ல. தமிழரசுக்கட்சியின் பழமையான உறுப்பினர்களே. தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை. என்னையும் ஒரு வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுகட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அதனை வழங்கவில்லை. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தமிழரசுக்கட்சியின் பழமையான உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட வண்டில் சின்னமானது இன்று பிரதேச சபையின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்றியது என திருக்கோவில் பிரதேச வண்டில் சின்ன சுயேட்சை குழு தலைமை வேட்பாளரும் எதிர்கால தவிசாளருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்.
திருக்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேற்சை குழுவாக களமிறங்கி 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த அவர் தனது எதிர்கால அரசியல் நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் எங்களது வண்டில் சின்னத்தினை வெற்றி பெறச்செய்த அத்தனை மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். எதிர்காலத்தில் எனது தலைமையில் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இடம்பெறும். இதன் பங்காளர்களாக வெற்றி பெற்ற கட்சிகளும் தோல்வி அடைந்தவர்களும் இணைந்து அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட  அழைப்பு விடுக்கின்றேன்.
எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். பிரிந்து செயற்பட்டால் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் தொடர்ந்தும் தமிழரசுக்கட்சியில் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளோம். ஆனால் பிரதேச தலைமைத்துவத்தை எங்களிடம் வழங்கவேண்டும். தேர்தலில் தோல்வியடைந்தவர்களை மீண்டும் சபையில் உள்வாங்கி இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இதேநேரம் வெற்றி பெற்ற எங்களது வேட்பாளர்களை பல சலுகைகள் வழங்கி அவர்கள் பக்கம் திருப்ப பலர் முயற்சி செய்கின்றனர். இருந்தபோதிலும் எங்களது உறுப்பினர்கள் சலுகைகளுக்கு அடிபணிந்து செல்லமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.