ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் இறந்திருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு தெரிவித்துள்ளார்.
மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும் சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
மற்றொரு அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, "ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மைதானத்தைச் சுற்றி திரண்டனர்" என்றார்.
End of அதிகம் படிக்கப்பட்டது
இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்சிபியின் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம், ஆனால் அது யாருடைய உயிரையும் விட பெரியதாக இருக்க முடியாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. காவல் ஆணையர் மற்றும் அனைவரிடமும் பேசியுள்ளேன். நான் சற்று நேரம் கழித்து மருத்துவமனைக்குச் செல்வேன். இப்போதைக்கு நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை." என்றார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியான எண்ணிக்கையை இப்போது சொல்ல முடியாது. மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்." என்றார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.
நேற்று ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருடங்களில் முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் முன்னே அமர்ந்திருக்க, பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியின் வீரர்களை கௌரவிக்க விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தில் இருந்து பேசிய ஆர்சிபி ரசிகை ஒருவர், "உள்ளே இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன, அதனால்தான் எங்களை உள்ளே விடவில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
வாயில்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன, காவல்துறை வாயில்களைத் திறந்தாலும், மக்கள் உள்ளே வரத் தொடங்குவார்கள். ஏற்கனவே நிறைய பேர் காயமடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான காணொளிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.


Post a Comment
Post a Comment