இரான் உச்ச தலைவர் காமனெயியை கொல்ல இஸ்ரேல் திட்டமா? டிரம்புடன் நெதன்யாகு பேசியதாக தகவல்



 


இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளி ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வது, "சிறந்த யோசனை அல்ல" என டிரம்ப் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் பொதுவெளியில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை இரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதையடுத்து, இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் வெளியான தகவலை நெதன்யாகு உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.