சிறைச்சாலைக்குள் சந்தேக நபர் படமாக்கப்பட்டதை அடுத்து,நீதிமன்றம் எச்சரித்துள்ளது




கடந்த மே மாதம் 22 ந் திகதி, டெய்லி மெயில் பத்திரிகையில், போதைப் பொருள் வைத்திருந்த சந்தேக நபர்-Charlotte May Lee,சிறைச்சாலையிலிருந்து பேசும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.

வெலிக்கடை  சிறைச்சாலைக்குள் இங்கிலாந்து போதைப்பொருள் சந்தேக நபர் படமாக்கப்பட்ட வீடியோவை அடுத்து, சிறை அதிகாரிகளை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

பார்வையாளர் ஒருவர் மறைக்கப்பட்ட பொத்தான் கேமராவைப் பயன்படுத்தி காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரான பிரித்தானிய யுவதியை மன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தார். யுவதியின் பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட 46 கிலோ குஷ் போதைப் பொருள் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதனை நீதிமன்றத்தின் வழக்கு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் அறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி சம்பத் பெரேரா மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.  அண்மையில் சிலர் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு  எனது சேவை பெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு  சென்று காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

இதன் ஊடாக எனது சேவை பெறுநர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த யுவதியின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வருகை தந்து அவரை பார்வையிட அனுமதி கோரினர். சாதாரண நடைமுறையின் கீழ் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கினோம். அதில் ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள சிறிய கமராவை பயன்படுத்தி அங்கு நடந்த விடயங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் எனக்கூறினர்.

இதற்கமைய இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திறந்த மன்றில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு  சிறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 


இந்த சந்தேகநபரை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


#DailyMailUk/DMSriLanka 22/5/2025