நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு போராட்டம்






பாறுக் ஷிஹான்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஊடக வெளியீட்டில்

இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு
மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம்

 இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மாகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளன.


இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன மத பேதமின்மை " எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

மேலும், 2015ஆம் ஆண்டு. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20 ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.

ஆகவே, இனவாதத்தில் சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம்.

சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள்,எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன.

எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் திடமான அரசியல் அபிலாசையாகும்.