சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால் பிரியந்த வீரசூரியவிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 E (b) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 37வது பொலிஸ் மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டார்.
158 ஆண்டுகால பொலிஸ் வரலாற்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருந்து பொலிஸ் மா அதிபராக உயர்ந்த முதல் அதிகாரி பிரியந்த வீரசூரிய என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியான இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞராகப் பதவியேற்ற பிறகு உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆனார்.
மனிதவள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், பொலிஸ் துறையில் வீரசூரியவின் முப்பத்தாறு ஆண்டுகால சிறந்த சேவையைப் பாராட்டி 10 பொலிஸ் மா அதிபர்கள் பாராட்டுக் கடிதங்களை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குற்றம் மற்றும் போக்குவரத்தை மேற்பார்வையிடும் பிரதி பொலிஸ் அத்தியட்சராகவும்(டிஐஜி) , பொலிஸ் இயக்குநராகவும் பணியாற்றிய அவர், கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று கட்டங்களையும் தாண்டி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment