(எம். என். எம்.அப்ராஸ்)
கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம்.அப்துல் ஸலாம் அவர்கள் நேற்று (22) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் றியால் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பாடசாலைக்கான அதிபர் நியமனத்திற்கான நேர்முக தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிபர் எம். அப்துல் ஸலாம் அவர்களுக்கான நியமனக் கடிதம் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சஹ்துல் நஜீம் அவர்களினால் வழங்கப்பட்டது.
அப்துல் ஸலாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியிலும் கற்றார். அதன் பின்னர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முதல் தொகுதியினராக கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து விஞ்ஞான பாட ஆசிரியராக நியமனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகத்தில் விஞ்ஞான கல்விமாணி பட்டத்தைப் பூர்த்தி செய்தார். இந்நிலையில் இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இச்சேவையில் தரம் 3 இற்கு நியமனம் பெற்றார். அதன் பின்னர் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து தற்போது முதுகலைமாணி கற்கை நெறியினை கற்றுக்கொண்டிருக்கின்றார். இவரது இளமைப்பருவத்திலிருந்து ஆங்கில மொழியில் ஒரு அலாதியான விருப்புக் கொண்டவராக காணப்பட்டமையினால் தனது சுய தேடலின் மூலம் ஆங்கிலத்தில் உச்ச புலமை கொண்ட ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் சிறுபரயம் முதல் கிறிகெட், காற்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் காணப்படுகிறார்.
இவரது ஆங்கில புலமை காரணமாக மேற்படி விளையாட்டுக்களின் விதிமுறகள் தொடர்பான சிறந்த அறிவினையும் தெளிவினையும் பெற்றிருந்தார். அத்தோடு கணிணியில் சிறப்பு தேர்ச்சி உடையவராகவும் உள்ளார். விஞ்ஞான பாட ஆசிரியராக 1995 ஆம் ஆண்டு கல்முனை சாஹிறா கல்லூரியில் நியமனம் பெற்ற இவர் இப்பாடசாலையில் சிறந்த விஞ்ஞான பட ஆசிரியராக மிளிர்ந்தார். இப்பாடசாலையில் சுமார் 22 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவருக்கு இருந்த ஆங்கிலப் புலமை, கணிணி மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பான அறிவும் தேர்ச்சியும் இப்பாடசாலையின் பல்வேறுபட்ட துறைகளுக்கு பொறுப்பானவராக நியமனம் பெறுவதற்கு வழிவகுத்தது. இதனடிப்படையில் சாஹிரா கல்லூரியின் கணிணி பிரிவுக்கு பொறுப்பாக இருந்த இவர் மாணவர்களுக்கு கணிணி டிப்ளோமா கற்கை நெறிகளை மாலை நேரத்தில் நடாத்தி பாடசாலையினால் சான்றிதழ்களும் வழங்குவதற்கு வழிசெய்தார். அந்தவகையில் பாடசாலையின் கணிணி கூடத்தை ஒழுங்கமைக்கப்பட்ட ரீதி்யாக பயன்படுத்தி இப்பிராந்திய மாணவர்களின் கணிணிக் கல்விக்கு வித்திட்டார். அத்தோடு விளையாட்டுக்களில் அவருக்கு இருந்த நிறைவான அறிவினால் சதுரங்கம் என்ற விளையாட்டு இப்பிராந்தியத்தில் அறியப்படாமல் இருந்த காலத்தில் இப்பாடசாலை மாணவர்களை அவ்விளையாட்டில் பயிற்றுவித்து பல்வேறு சாதனைகளை புரிவதற்கு வழியமைத்தார். எந்த பொறுப்பினையும் பின்னிற்காமல் ஏற்கும் ஆளுமை கொண்ட இவர் பாடசாலையின் சாரணர் மற்றும் விளையாட்டுக்களுக்கும் காத்திரமான பங்கினை ஆற்றி இருந்தார். இலங்கை சாரணர் இயக்கத்தின் CLT பதவியினை வகிக்கும் அப்துல் ஸலாம் அவர்கள் தேசிய சாரணர் பயிற்சிக் குழுவின் உறுப்பினராகவும் செயற்படுகின்றார். அத்தோடு அகில இலங்கை கிறிகெட் சம்மேளனத்தின் இரண்டாம் நிலை நடுவராக 2002 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை செயற்பட்டார்.
இலங்கை அதிபர் சேவையில் 2016ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம், சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் வித்தியாலயம் மற்றும் கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பிரதி அதிபராகவும் இறுதியாக ஒரு வருடகாலம் கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலய அதிபராகவும் கடமையாற்றினார்.
பல்துறைப் புலமையும் சிறந்த ஆளுமையும் கொண்ட இவர் கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்றிருப்பது இப்பிரதேச மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment
Post a Comment