பொத்துவிலின் பன்முக ஆளுமை,சிரேஷ்ட சட்டத்தரணி, ஆதம்லெப்பை அவர்கள் -மறைவு




பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார்.


(எஸ்.எம்.அறூஸ்)


பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னார்இ  ஆதம் கண்டு அலிமாக் கண்டு என்பவரது கணவரும் சட்டத்தரணி ஏ.எல் ஹில்மி, கிழக்கு மாகாண விவசாய,  காணி நிர்வாகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,   சட்டத்தரணி ஏ.எல்.பௌமி , ஏ எல் றிஸ்மி, மர்ஹூமா  பாத்திமா றிஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். 


பொத்துவில் பிரதேசத்தின் உயரிய குடும்பத்தில் பிறந்து கல்விப் புலத்திலும், இலக்கியப் புலத்திலும் சிறந்த  ஆளுமையாக விளங்கியதுடன் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக பணியாற்றி தனது பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் மர்ஹூம் ஆதம்லெப்பை அவர்களாகும்.


பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்தாலும் கல்வி,இலக்கியம், விளையாட்டு, அரசியல் ரீதியாக தேசிய  பல அடைவுகளை ஏற்படுத்திய பலரும் பிறந்து வளர்ந்த மண்ணாகும். அந்த  வகையில் தனது பல்துறை  ஆற்றலினால் பொத்துவில் பிரதேசத்தை முதன்மைப்படுத்திய தலைவராக மர்ஹூம் ஆதம்லெப்பை பார்க்கப்படுகின்றார்.


இலங்கையின் பாடப்புத்தகத்தில் ஆதம்லெப்பை அவர்களின் வெண்ணிலா என்கின்ற கவிதை இடம்பெற்றுள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களான இருந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருடன் மிக நெருக்கமாக செயற்பட்டு பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும், தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்த  அரசியல் தலைவராவார்.

ஏழை,பணக்காரன் என்று வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் அன்பாகப்பழகும் ஆதம்லெப்பை அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தான் பிறந்த மண்ணிற்கும், சமூகத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றிய  ஆதம்லெப்பை அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.