(சுகிர்தகுமார்)
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் உள்ளிட்ட நீண்ட கடற்கரை பிரதேசம் கடல் அரிப்பு காரணமாக பெறுமதியான வளங்களை கடலுக்கு இரையாக்கி இழந்து வருகின்றது.
அத்தோடு மீனவர்களின் தங்குமிடங்கள் அரச கட்டடங்கள் தென்னை மரங்கள் குடியிருப்புக்கள் என அத்தனை வளங்களையும் கடல் காவு கொண்டுள்ளது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் தேசத்து கோயிலான ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மதில் சுவர்களையும் காவு கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்ட திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிக்குமார் பிரதேச மக்கள் சகிதம் நிலைமையினை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் கடந்தகால அரசாங்கங்கள் கடல் அரிப்பை தடுப்பதாக தெரிவித்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மில்லியன் கணக்கில் செலவு செய்தது. இருப்பினும் அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. மாறாக கடல் அரிப்பை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பாரிய பாறாங்கற்கள் கூட கடல் அருகே குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கடல் நிலத்தினை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இந்நிலை தொடருமானால் மக்கள் குடியிருப்புக்களை இழந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டிவரும் என்பதுடன் மீனவர்கள் தொழிலை இழக்கும் நிலை உருவாகும்.
பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் இந்நிலையினை தடை செய்யவேண்டுமெனில் அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டினை சிறப்பாக வழிநடத்துவதை அனைத்து மக்களும் அறிந்து கொண்டுள்ளனர். ஆகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இதனை கருத்திற்கொண்டு மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கையினை தவிசாளரும் பொதுமக்களும் விடுத்தனர்.


Post a Comment
Post a Comment