2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலங்களில் ஓய்வுநிலைக்குச் சென்ற அரச ஊழியர்களின் நிலை என்ன?



  ஆலையடிவேம்பு நிருபர்





வி.சுகிர்தகுமார்      

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் நாட்டு மக்கள் நன்மை அடையக்கூடிய பல செயற்திட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வறிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இவற்றினை நிவர்த்தி செய்தால் இவ்வரவு செலவுத் திட்ட அறிக்கை பூரணமடையுமென இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.பி. கமால்தீன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 2019ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுநிலைக்குச் சென்றவர்களுக்கும் 2024ம் ஆண்டுக்குப் பின்பு ஓய்வு நிலைக்குச் சென்றவர்களுக்கும் இவை தவிர 2025ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுநிலைக்குச் செல்பவர்களுக்கும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலங்களில் ஓய்வுநிலைக்குச் சென்ற அரச ஊழியர்களுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் இவர்களுக்கு ஆணைக்குழுவை நியமித்து அவ்வறிக்கையின் பிரகாரம் கொடுப்பனவுகள் வழங்குவதாக முன்மொழியப்பட்டுள்ளது. இவ்விடயம் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குள் ஓய்வு நிலைக்கு சென்றவர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கடந்த 2025ம் நடப்பு வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 100மூ சம்பள உயர்வு வழங்கி அதனை மூன்று கட்டங்களாக பிரித்து முதற்கட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது கட்டத்திற்கான பணத்தினை இவ்வருடத்திற்கான அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வாறு சேவையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுக்கான நிதி ஒதுக்கப்பட்ட போது ஏன் ஓய்வு நிலைக்கு சென்றவர்களுக்கு ஓய்வூதிய அதிகரிப்புக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என இலங்கை ஜனநாயக முன்னனி வினவுகின்றது.

2019க்கும் 2024க்கும் இடையில் ஓய்வு நிலைக்குச் செல்பவர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்க ஆணைக்குழு அமைப்பதாக ஜனாதிபதி அவர்கள் சபையில் முன்மொழிந்துள்ளார். அவ்வாறு ஆணைக்குழுவினுடைய அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் 2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மூன்றிலொரு கட்டம் வழங்கியதுபோல் ஓய்வுநிலைக்குச் சென்றவர்களுக்கும் அதே தினத்திலிருந்து கொடுப்பனவு வழங்க ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குமாறு இலங்கை ஜனநாயக முன்னணி அரசை கேட்டுக்கொள்கின்றது.