சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற நீதிபதி,சத்தியப்பிரமாணம்




அகமட் எஸ். முகைடீன்

 சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற மீராலெப்பை தாஸீம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!


அகமட் எஸ். முகைடீன்


சம்மாந்துறை TREND 

Thu, Nov 06 - 2025


சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் புதிய குவாஷி நீதிபதியாக ஓய்வு பெற்ற கிராமசேவக நிர்வாக உத்தியோகத்தர் மீராலெப்பை தாஸீம் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


அதற்கமைவாக, திங்கட்கிழமை (03.11.2025) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் முன்னிலையில் குவாஷி நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, இன்று (06.11.2025) வியாழக்கிழமை சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


மீராலெப்பை மற்றும் லைலத்தும்மா தம்பதிகளின் புதல்வரான தாஸீம் அவர்கள், சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் தலைவராகவும், சம்மாந்துறை இஸ்லாமிய தஃவா கலாபீடத்தின் பணிப்பாளராகவும், சம்மாந்துறை SWDC அமைப்பின் உறுப்பினராகவும் தற்போது செயற்பட்டு வருகிறார்.


அரசாங்க சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், 1990 ஆம் ஆண்டு கொழும்பு நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞராக நியமனம் பெற்று கடமையாற்றினார். பின்னர், 1993 ஆம் ஆண்டு அம்பாறை நில அளவைத் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று ஒன்பது வருடங்கள் படவரைஞராக சேவையாற்றினார்.


இந்நிலையில், 1993ஆம் ஆண்டு இலங்கை சுங்க ஆய்வாளர் (Custom Inspector) பதவிக்கும், 1996ஆம் ஆண்டு பொதுச் சுகாதார பரிசோதகர் பதவிக்கும் நடைபெற்ற போட்டி மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் சித்தியடைந்து அப்பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை பெற்றிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவிகளை அவர் பெறுப்பேற்கவில்லை. 


சமூகம், ஊர் சார்பாக பல்வேறு கருமங்களை ஆற்றக்கூடிய கிராமசேவகர் பதவிக்கு 1999ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர், சம்மாந்துறை பிரதேச செயலக கிராமசேவகர் பிரிவுகளில் பணியாற்றினார். பின்னர், கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சம்மாந்துறை பிரதேச செயலாக கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடமையாற்றினார். 


இக்காலப்பகுதியில், இவர் தனது உத்தியோகபூர்வப் பொறுப்புகளுக்கு அப்பால், சம்மாந்துறை தொடர்பான பல தகவல்களைத் தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு, பிரதேச செயலகத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் முன்னின்று திறம்படச் செயல்பட்டார். குறிப்பாக, குடும்பப் பிணக்குகள் மற்றும் காணித் தகராறுகளை கிராம அலுவலர் மட்டத்தில் தீர்த்து வைப்பதில் இவர் மிகச் சாதுரியமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், குடும்ப உறவைப் பேணுவதற்காகவும், சமூக நலத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காகவும் இவரது இரத்த உறவுகள் ஒன்றிணைந்து மீரா பவுண்டேஷன் என்னும் அமைப்பை 1985ஆம் ஆண்டு ஸ்தாபித்தபோது, அதன் செயலாளராக இவர் செயற்பட்டிருந்தார். இவ்வமைப்பானது தற்போது தொடர்ந்து இயங்கி வருவதோடு, அதன் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராகவும் இவர் செயற்படுகின்றார்.


சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், குவாஷி நீதித்துறையினை மேலும் வலுப்படுத்தி, சம்மாந்துறை குவாஷி நீதி மண்றத்தை இலங்கையின் முன்மாதிரியான குவாஷி நீதிமன்றமாகச் செயற்படுத்த வேண்டும் என்ற உயரிய சேவை நோக்கத்துடன் இப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.


இவரது பல்துறை ஆளுமை மற்றும் இஸ்லாமிய மார்க்கப் பேணுதல் ஆகியவற்றின் மூலம், சம்மாந்துறையில் குவாஷி நீதித்துறை புத்துணர்ச்சி பெறும் என மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.


நிந்தவூர் குவாஷி நீதிமன்ற்த்தின் குவாஷி நீதிபதியும் சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.இல்யாஸ் தலமையில் நடைபெற்ற பதவியேற்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொது நிர்வாகம்) ஏ.மன்சூர், சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற்த்தின் குவாஷி நீதிபதி ஏ.எல் ஆதம்பாவா, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்சூறா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி), சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எல்.எச். பஷீர் (மதனி), ஓய்வுபெற்ற வனபரிபாலகரும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்சூறா தவிசாளரும், மீரா பவுண்டேஷன் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகருமான எம்.எல்.அப்துல் மஜீட், கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வை.பி.எம்.அப்துல் அஸீஸ், சம்மாந்துறை இணக்கசபைத் தலைவர் மௌலவி எம்.வை.ஏ.ஜலீல், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம். றம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஸ்ரபுல் இஸ்லாஹி தலைவர் ஐ.ஏ. ஜப்பார் ஏ.டீ, ஊவாமாகாண தொழில் ஆணையாளரும், SWDC பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம்.அன்சார்,  ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நிறைவேற்று அதிகாரி எம்.ஐ.எம்.முகைடீன் உட்படப் பல ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


 ♡     ⎙     ➦

ʳᵉᵃᶜᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


For more update !!

Join Our `WhatsApp Groups

Group No . 17/19 

https://chat.whatsapp.com/CrR8BAjP3CP8lReQkSRUm7?mode=wwt

 *றிகாஷ் எம். அலியார்*