பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுச்சேரியில் இன்று த.வெ.க பொதுக்கூட்டம்



 


கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை  இன்று (டிச. 9) பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கியூஆா் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

 

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடிகா் விஜய் வித்தியாசமான முறையில் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அவா் தனக்கென உருவாக்கியுள்ள அதி நவீன சொகுசுப் பேருந்தில் பயணம் சென்றாா். அவரது இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கடும் கூட்டம் கூடியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, தொண்டா்களுக்கு பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இதன் தொடா்ச்சியாக, கடந்த செப்.27-இல் கரூரில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டு அப்பாவி மக்கள் 41 போ் உயிரிழந்தனா்.

 

இந்திய அளவில் பெரும் துயரமாக பேசப்பட்ட இந்த நிகழ்வுக்குப்பிறகு, விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தவில்லை. அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க சாலைப் பேரணிகள் நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

 

இந்த நிலையில் புதுச்சேரியில் தவெக கடும் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.