மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல் !



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனையின் உள்ளக பிரதான வீதிகளில் ஒன்றான மருதமுனை ஜாயா வீதியானது மிக நீண்டகாலமாக எதுவித அபிவிருத்தியும் இன்றி காணப்படுவதானது இப்பிரதேச மக்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், சாதாரண மழை பெய்தால் கூட பெருவெள்ளமும்,சேறும் சகதியுமாக காணப்படும் மேற்படி வீதியானது மழைகாலங்களில் பாடசாலை மாணவர்கள் கூட போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு மாறிவிடுகின்ற அதேவேளை, இவ்வீதி பல்வேறு வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.

இவ்வீதியானது குறிப்பாக மருதமுனையின் பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசல், மருதமுனையின் பிரதான சந்தை, முன்னணிப் பாடசாலையான அல்-ஹம்றா வித்தியாலயம், ஸைனப் முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி, ஹம்றா பாலர் பாடசாலை உள்ளிட்ட பல அரச, தனியார் நிறுவனங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன், மருதமுனை மக்களின் அதிக பாவனைக்குரியதாகவும் இவ்வீதியே காணப்படுகின்றது.

நீண்டகாலமாக கல்முனை மாநகரசபையினதோ அல்லது கல்முனை பிரதேச செயலகத்தினதோ எதுவித செயற்திட்டங்களிற்குள்ளும் உள்வாங்கப்படாது தொடர்ந்தும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு விரைவான தீர்வினை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.