மர்ஹூம் காதர் முகைதீன் சேர் நினைவேந்தல் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில்



 நூருல் ஹுதா உமர்


வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.12.2025) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 20.12.2025 (சனிக்கிழமை) அன்று 88 வயதில் வஃபாத்தான மர்ஹூம் காதர் முகைதீன் அவர்கள், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபராக பணியாற்றியதோடு, இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக உயர்த்துவதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய கல்வி நிர்வாகியாக விளங்கினார்.

அன்னாரின் கல்விச் சேவைகளை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வை பாடசாலை நிருவாகமும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

பாடசாலை அதிபர் உரையாற்றும் போது, மர்ஹூம் காதர் முகைதீன் அவர்கள் கல்விக்காக செய்த அர்ப்பணிப்பான சேவைகள் மற்றும் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், “ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை அவர் செய்து விட்டுச் சென்ற பணிகளே பேசும். இன்று ஒரு சேவையாளருக்காக நாம் அனைவரும் ஒன்றுகூடி இறைவனிடம் பிரார்த்திக்கும் நிலைமை, அவர் இந்த சமூகத்திற்கு செய்த அரிய சேவைகளுக்கான உயிர்ப்பான சாட்சி” எனக் குறிப்பிட்டார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் கல்வி வரலாற்றுச் சேவைகளை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.