ஹட்டனில் சதொச கொள்கலன் ஊர்தி தாழிறக்கம்: வீதியை நோக்கி சாய்ந்து ஆபத்தான நிலையில்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியாப்பு சந்தியில் அமைந்துள்ள சதொச கிளைக்கு முன்னால், இன்று (10) காலை பொருட்கள் ஏற்றிய பாரிய கொள்கலன் (Container) ஊர்தியொன்று தாழிறங்கியதால் ஆபத்தான நிலையும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வீரவில பகுதியில் இருந்து பெருமளவிலான அரிசி மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றிக்கொண்டு ஹட்டன் சதொச கிளைக்கு வந்த இந்தக் கொள்கலன் ஊர்தி, இன்று காலை 9.00 மணியளவில் பொருட்களை இறக்குவதற்காக சதொச நிறுவனத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டது. இதன்போது, வீதியில் போடப்பட்டிருந்த கொன்கிரீட் தளம் ஊர்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் உடைந்ததில், அதன் சில்லொன்று நிலத்திற்குள் புதைந்து போயுள்ளது.
இந்தத் தாழிறக்கத்தினால் கொள்கலன் ஊர்தி பிரதான வீதியை நோக்கி சாய்ந்து காணப்படுவதுடன், அது வீதியில் கவிழ்ந்து விழக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஊர்தியில் உள்ள அதிகப்படியான பாரம் காரணமாக, அதனை அந்த இடத்திலிருந்து அகற்றும் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், பிரதான வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டதால் ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊர்தியிலுள்ள பொருட்களை வேறொரு வாகனத்திற்கு மாற்றி, கொள்கலன் ஊர்தியை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Post a Comment
Post a Comment