அம்புலுவாவயில் அனைத்து நிர்மாணப் பணிகளையும் நிறுத்துமாறு அறிவிப்பு



 நிபுணர்களிடம் இருந்து முறையான அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு, அபாய நிலை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது. 


அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தின் முகாமைத்துவத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தை அவதானிப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ, சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய மிக அழகான இடமாகும். இது கம்பளை நகருக்கு வருபவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் ஒரு மலை உச்சியாகும். 

அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள அம்புலுவாவ பல்லுயிர் பெருக்க வளாகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த இடமாகும். 

கம்பளை - ஹெம்மாத்தகம வீதியில் பயணிக்கும் போது சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அம்புலுவாவவுக்கான பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலை உச்சிக்குச் செல்வதன் மூலம் அம்புலுவாவ விகாரையை அடையலாம். 

அம்புலுவாவ 927 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுடன், அதிகளவிலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் உயர் பல்லுயிர் தன்மையைக் கொண்ட ஒரு அழகிய சூழல் தொகுதியாகும். மலை உச்சியில் நெற்களஞ்சியத்தின் வடிவில் அம்புலுவாவ சைத்தியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 400 அடி உயரத்தைக் கொண்டது. 

இந்தச் சைத்தியத்தின் உச்சிக்கு ஏறுவது மிகவும் சிலிர்ப்பான ஒரு அனுபவமாகும். இதற்காகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.