நூருல் ஹுதா உமர்
இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை தேசிய மட்டத்தில் புத்தாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற இரு மாணவர்களை கௌரவித்துள்ளது.
அதன்படி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப். ஹிமா மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ. அஸ்ரிப் ஆகியோர், பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு இடம்பெற்றபோது, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.
குறித்த இரு மாணவர்களின் புத்தாக்க மற்றும் கண்டுபிடிப்பு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடனும், அவர்களுக்கு பணப்பரிசு, பொன்னாடை போர்த்தல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், மாணவர்களின் சாதனை சம்மாந்துறை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment