இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்கள் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
உள்நாட்டு மருத்துவர்கள் அறுவர் சீறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான சிறுநீரகங்களை இந்தியாவிலுள்ளவர்களிடமிருந்தே அதிகூடிய விலைக்கு தரகர்கள் மூலம் பெற்று இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள மிகவும் பிரபலமான நான்கு மருத்துவமனைகளைச் சேர்ந்த ஆறு வைத்தியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், குறித்த ஆறு வைத்தியர்களுக்கு எதிராகவும் இந்தியாவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

