விடுதலைப் புலிகளின் எமில் காந்தன் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்'



இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை ஊடாக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட அந்தனி எமில் காந்தன் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
அந்தனி எமில் காந்தனுக்கு எதிராக சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்ப்படிருந்தபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.
இதனால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி நீதிமன்றம் இண்டர்போல் ஊடாக உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
இந்தப் பின்னணியில், சந்தேகநபரான எமில்காந்தன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஆனால் இண்டர்போலின் பிடியாணை காரணமாக, எமில் காந்தன் இலங்கை வந்து நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவரைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வாபஸ் பெறுமாறும் அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி,கைதுசெய்யுமாறு இண்டர்போலுக்கு பிறப்பித்திருந்த ஆணையை வாபஸ் பெற்றுள்ள நீதிமன்றம், சந்தேகநபரான எமில் காந்தனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எமில் காந்தன் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதித்துறையில் ஒரு முக்கிய தலைவராக இருந்துள்ளதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.