இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விசாரணையின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துமனைகள் தொடர்பில் இரகசிய பொலிஸ் ஊடாக விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தனியார் மருத்துமனைகள் சிலவற்றில் இந்தியப் பிரஜைகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளியானதை அடுத்து, அது தொடர்பில் விசாரிக்க டாக்டர் ஜயசிங்க பண்டா தலைமையில் சுகாதார அமைச்சினால் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இரகசிய பொலிஸார் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளும் விசாரணைகளுக்கமைய, சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவர்கள் அல்லாதவர்களும் இந்த சட்டவிரோத செயலுடன் தொடர்புப்பட்டுள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

