பசில்,நாமல் அடுத்த இரு வாரத்துக்குள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு




சிவில் விமானப் பயணங்களுக்காக 1500 லட்சம் ரூபா அரச நிதியை செலவு செய்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பாரிய லஞ்ச ஊழல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அடுத்த இரு வாரத்துக்குள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாரிய தொகை இவ்விருவரின் உள்ளக விமானப் போக்குவரத்துக்காக மாத்திரம் செலவு செய்யப்பட்டவை என ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆணைக்குழுவின் தகவல்களின் படி, பசில் ராஜபக்ஷ கடந்த ஆட்சியில் இரு வருடங்களுக்குள் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்காக மாத்திரம் 1052 லட்சம் ரூபாவை செலவு செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே இந்த உள்ளக விமான சேவைக்கட்டணத்தில் அதிகமானவை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாத்திரம் உள்ளக விமானப் போக்குவரத்துக் கட்டணமாக கடந்த ஐந்து வருட காலத்தில் 500 லட்சம் ரூபாவை செலவு செய்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.