காணிகளை உரிமையாக்க தங்களை அடிமைப்படுத்தியிருப்பதாக மகாஊவா தோட்ட மக்கள் விசனம்





(க.கிஷாந்தன்)

தேயிலை காணிகளை உரிமையாக்குவதாக குறிப்பிட்டு தங்களை அரசாங்கம் அடிமைப்படுத்தியிருப்பதாக வலப்பனை மகாஊவா தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு தொழிலாளிக்கு ஆயிரத்து 500 தேயிலைச் செடிகள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அது குறித்த ஒப்பந்தத்தில் உரிமை குறித்த தெளிவுபடுத்தல் இல்லையெனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொழிலாளர்களின் சேவவைக்காலப் பணம் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆயிரத்து 500 செடிகளில் ஒரு மாதத்தில் நான்கு தடவைகள் கொழுந்து பறிக்க முடியுமெனவும், எனினும் தற்போது இரண்டு தடவைகள் மாத்திரமே கொழுந்து பறிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆயிரத்து 500 தேயிலைச் செடிகள் தங்களுக்கு சொந்தமாக இருப்பதாக ஆரம்பத்தில் மகிழ்ச்சியடைந்த தாங்கள் தற்போது செய்வதறியாது தவிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஒரு நேர உணவினைப் பெற்றுக் கொள்ளவே கஷ்டப்படும் தாங்கள், தேயிலை செடிகளை பராமரிப்பதற்கான பணத்திற்கு எங்கே செல்வது எனக் கேள்வியெழுப்புகின்றனர்.

இதுதொடர்பில் பெருந்தோட்டங்களை நடத்திச் செல்லும் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்தி தேயிலைச் செடிகளில் இருந்து வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வரையில், அதற்கான செலவு மற்றும் தங்களது நாளாந்த தேவைகளை நிறைவு செய்வதற்கான நிதியினை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு செயற்படாத விதத்தில் தாங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடும் என மகாஊவா தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.