தமிழில் தேசிய கீதம் அரசியல் சாசன மீறலா?




இலங்கையில், இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது, இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் சாசனத்தின்படி, தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாட முடியும் என குறிப்பிட்டு, வழக்கினை தாக்கல் செய்துள்ள கெலனிய பிரதேசவாசிகள் மூவர், தமிழில் பாடுவதற்கு அரசியல் சாசனத்தில் அனுமதி இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசியல் சாசனத்தின் தமிழ் பிரதியில், தேசிய கீதம் தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது சட்டபூர்வமானது என கூறிய அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும், முன்னர் மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இம்முறை, சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதை அவர் வரவேற்றுள்ளார்.