சம்பந்தனுக்கு எதிராக கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில்




இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என ஏழு சிறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்று (27) நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையக இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர் எனவும், இதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் தமிழ் மக்கள் எந்த இடையூறுகளும் இன்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகம் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்தின தேரர் உட்பட மேலும் ழு சிறு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.