’கிழக்கு மக்களுக்கு வரப்பிரசாதம்’


வி.சுகிர்தகுமார் 
மாகாணசபை தேர்தலில் உருவாக்கப்பட்டுள்ள 50க்கும் 50 எனும் தேர்தல் முறை,  கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசச் செயலகத்துக்குட்பட்ட  தாண்டியடி பிரதேசத்தில், நேற்று (06) நடைபெற்ற புதிய வீடமைப்பு தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“புதிய தேர்தல் முறை மூலம், கிழக்கு மாகாண சபையில் அதிக ஆசனங்களை பெற்று, முதலமைச்சரையும் பெறக் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற மாகாணசபைத் தேர்தலில், 16க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று,  எந்தக் கட்சியினுடைய உதவியுமின்றி தனியான ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிட்டியுள்ளது என்றார்.
“இதேவேளை உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வு கிடைக்கும் சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த மிகப்பெரிய வெற்றியானது, சிறுபான்மை கட்சிகளின் செயற்பாட்டினால்,  அனைவரது ஒத்துழைப்போடு பெறப்பட்டுள்ளது எனவும் இத்திட்டத்தை அனைத்து கட்சிகளும் இணைந்து முன்னெடுத்துள்ள போதிலும், நூறு வீதமான நன்மையை தமிழ் மக்கள் பெற்றுள்ளனர் எனவும் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக கருதமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
“கடந்தகால அரசாங்கம், தமிழர்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்தமை மிகவும் அரிதாக காணப்பட்டது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழர்களது தேவை தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றபோது அவற்றை நிறைவு செய்து வருகின்றது.
 “ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இந்த நல்லாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்தி ஆட்சியை நிலைக்க செய்வதுடன் நன்றிகடனுள்ளவர்காளாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.