அம்பாந்தோட்டை பொலிஸ் தாக்குதல்: தேசிய போலிஸ் ஆணையகம் தலையீடு






இலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது உயர் போலிஸ் அதிகாரியொருவர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேசிய போலிஸ் ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த போலிஸ் அதிகாரி அந்நபரைத் தனது கையினால் தாக்குகின்ற காணொளி சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் மா அதிபதியிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தேசிய போலிஸ் ஆணையம் கூறுகிறது.
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள சர்வதேச விமானநிலையத்தை நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்திய நிறுவனமொன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிரணியினரால் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தடையை மீறி முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தின்போது போலிஸாரின் வீதித் தடையை உடைத்தெறிந்து ஆர்பாட்டக்காரர்கள் இந்திய துணைத் தூதுவராலயத்தை நோக்கி செல்ல முற்பட்ட வேளை குழப்ப நிலை ஏற்பட்டது. 4 போலிஸார் காயமுற்றனர்.
போலிஸாரல் மேற்கொள்ளப்பட்ட பதில் நடவடிக்கையொன்றின்போதே அந்நபர் உயர் அதிகாரியினால் தாக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும் அம்பாந்தோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் மஞ்சுள பிரசன்ன முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு போலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 16ம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.