சிங்கராஜ யானைகளால் தமிழ் பாடசாலைக்கு அச்சுறுத்தல்


சிங்கராஜ வனத்திலுள்ள இரண்டு யானைகளால், இறக்குவானை - கஜுகஸ்வத்த, கோப்பிகல ஆரம்பப் பாடசாலை, அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இவ்வச்சுறுத்தல் காரணமாக, குறித்த பாடசாலையை மூட வேண்டுமாயின், அதற்கு முன்னர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென, சப்ரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த யானைகள் இரண்டும், கடந்த 20ஆம் திகதியன்று, மேற்படி ஆரம்பப் பாடசாலைக்குள் நுழைந்து, பாடசாலை உபகரணங்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் விளைவித்தது. அதன்போது, பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத காரணத்தால், பாடசாலையை மூட நடவடிக்கை எடுத்ததாக, பாடசாலை அதிபர், ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த பாடசாலையாகும். தாம் இதனை, மீண்டும் இயங்கச் செய்ததால், இதனை அண்மித்த பகுதிகளிலுள்ள பெற்றோர், இப்பாடசாலைக்கே மாணவர்களை அனுப்புகின்றனர். அவர்கள், வருமானம் குறைந்த பெற்றோர்களாவர். குறித்த பாடசாலை மூடப்படுமாயின், 2 - 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கஜுகஸ்வத்த பாடசாலைக்கே, இந்த மாணவர்கள் செல்லநேரிடும். அத்துடன், பாடசாலையை மூடுவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை, பாடசாலை அதிபருக்கு இல்லையெனக் குறிப்பிட்டார்.
தற்போது, வனஜீவராசிகள் திணைக்களத்தில் பயிற்சிபெற்றவர்களே, இந்தப் பாடசாலை மாணவர்களைக் காலையில் பாடசாலைக்கு அழைத்து வருவதோடு, மாலையில் அழைத்துச் செல்கின்றனரெனத் தெரிவித்த செயலாளர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியுமென, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தமக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனரென்றும் கூறியுள்ளார்.
இந்த யானைப் பிரச்சினையானது, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கிடையில் ஏற்பட்டப் பிரச்சினையாகுமெனத் தெரிவித்துள்ள சப்ரகமுவா மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்,  குறித்த யானைகள், மேற்படி பாடசாலையின் வாயிலுக்கு அருகில் சென்று, அங்கிருந்த வாழைத் தோட்டத்தைச் சேதபடுத்தியுள்ளன என்றும் இதனைக் காரணங்காட்டி, பாடசாலையை மூடுவதற்குப் பெற்றோர் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.