கிழக்கில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 185 வழக்குகள்



(அப்துல்சலாம் யாசீம்)


கிழக்கு மாகாணத்தில் 2018 ஜனவரி  மாதம் முதல் ஜூன் மாதம்  வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 
185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சிவகெங்கா சுதீஸ்னர் தெரிவித்தார்.


சிறுவர் துஷ்பிரயோகங்கள்  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாகவும் போதை பாவனைகள் ,போதை மாத்திரைகள் மூலமாகவே அதிகளவில்  துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்  பெற்றுள்ளதாகவும்  விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம்  முதல் ஜூன் மாதம் வரை  திருகோணமலை மாவட்டத்தில் 37 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 111 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் 37 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைக்கும் விதத்தில் கிராம மட்டங்களில் தௌிவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதாகவும் அதற்காக அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் சிறுவர் தொடர்பாக பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் இருந்தால் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் கிழக்கு மாகாண  நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் சிவகெங்கா சுதீஸ்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.